ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் இணைந்து காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் ரெயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என சோதனை செய்து வருகின்றனர்.
அதன்படி நேற்று இரவு ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சீட்டுக்கு அடியில் 25 கிலோ வீதம் 40 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது. அதனை சோதனை செய்தபோது 1 டன் ரேஷன் அரிசி இருந்தது.
இதனையெடுத்து போலீசார் பயணிகளிடம் விசாரணை செய்ததில் ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுவின் மகள் சுமதி (வயது 38), மேட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி கிருஷ்ணவேணி (37) மற்றும் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் மகன் சரவணன் (30) ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.