நான்கு நாட்களில் 6 பேரை பலி கொண்ட 3 விபத்துகள்

நான்கு நாட்களில் 6 பேரை பலி கொண்ட 3 விபத்துகள் நடந்துள்ளன.;

Update:2023-01-08 01:27 IST

கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலையில்தான் அதிக விபத்துகள் நடைபெற்றுள்ளன. மேலும் இந்த ஆண்டு பிறந்து 8 நாட்கள்தான் ஆகிறது. இதில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தின் தடம் மறைவதற்குள் கடந்த 5-ந் தேதி பெரம்பலூர் அருகே விஜயகோபாலபுரத்தில் நடந்த விபத்தில் மதுரை மாவட்டத்தை சோ்ந்த 2 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் 4 நாட்களில் நடந்த 3 விபத்துகளில் 6 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுவதற்கு தூக்க கலக்கத்தில் வாகனங்களை ஓட்டி செல்வதும், லாரிகளை சாலையோரத்தில் நிறுத்துவதும், போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்காமல் செல்வதும்தான் முக்கிய காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் நெடுஞ்சாலையில் சில பகுதிகளில் மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. விபத்துகளை தடுக்க போதிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எடுக்காததும் ஒரு காரணம் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் சின்னாறு பகுதியில் மட்டும் லாரிகளை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால் அந்த இடம் போதுமானதாக இல்லை என்றும், இதனால் சாலையோரத்தில் லாரிகளை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது என்றும் டிரைவர்கள் கூறுகின்றனர். பெரம்பலூர் அருகே வாகன ஓட்டிகள் ஓய்வு எடுத்து செல்வதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம், போலீசாருடன் இணைந்து செய்தனர். ஆனால் அந்த பணி தற்போது கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை தேர்வு செய்து ஒதுக்கினால் தூக்க கலக்கத்தில் வரும் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்ல ஏதுவாக இருக்கும். இதனால் சாலை விபத்துகளை தடுக்கலாம் என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்