2-வது நாள் அமர்வு தொடங்கியது: தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.;
சென்னை,
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அவைக்கு கவர்னர் ஆர்.என். ரவி, 10 மணிக்கு வந்தார். தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டசபை துவங்கியது. இதற்குப் பிறகு கவர்னர் உரையை வாசிக்க ஆரம்பித்த கவர்னர் ஆர்.என். ரவி, சட்டசபை துவங்கும் முன்பாகவும் முடியும்போதும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார்.
மேலும், கவர்னர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அமையும் என்றும் கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி அமர்ந்தார். இதையடுத்து, கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சில கருத்துகளை முன்வைத்தார். சபாநாயகர் அப்பாவு அதனை சொல்லி முடித்ததும், கவர்னர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையை புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டும் இதேபோலத்தான், சட்டசபையில் இருந்து பாதியிலேயே கவர்னர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, அரசின் உரையை கவர்னர் முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்து அவையில் அமர்ந்து இருந்தது தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இந்த சூழலில் தமிழ்நாடு சட்டசபையின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கியது.
அதில் முதலாவதாக தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வெங்கிடரமணன், கண் டாக்டர் பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசாவின் முன்னாள் கவர்னருமான ராஜேந்திரன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்
இதனைத்தொடர்ந்து நாளை (14-ந் தேதி) எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. 15-ந் தேதியன்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் வைத்த விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிக்க உள்ளார்.
16, 17, 18-ந் தேதிகளில் சட்டசபை நடைபெறாது. 19-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை (பொது பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவைக்கு அளித்து, அதை வாசிப்பார்.
20-ந் தேதியன்று வேளாண்மை பட்ஜெட் அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் படிப்பார். வேளாண் பட்ஜெட், எம்.எல்.ஏ.க்களின் விவாதமின்றி நிறைவேற்றப்படும். அதைத்தொடர்ந்து 2024-25-ம் ஆண்டு செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் அவையில் வைக்கப்பட்டு விவாதமின்றி வாக்கெடுப்பு நடைபெறும். மேலும் 2024-25-ம் ஆண்டு செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் குறித்து நிதி ஒதுக்க சட்டமசோதா அறிமுகம் செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்படும்.
21-ந் தேதி காலையில், 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள், அவைக்கு அளிக்கப்பட்டு, அதுகுறித்த நிதி ஒதுக்க மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்படும். அதைத்தொடர்ந்து பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கும். அன்று மாலை 4 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும். அப்போதும் விவாதம் தொடர்ந்து நடைபெறும்.
22-ந் தேதி, பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் வைத்த விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை அளிப்பார். பின்னர் சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதோடு சட்டசபை கூட்டம் நிறைவடைந்து, மறுபடி கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.