ஈரோடு கனி மார்க்கெட்டில் 2-வது நாளாக கடையடைப்பு போராட்டம்

ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் 2-வது நாளாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-23 20:50 GMT

ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் 2-வது நாளாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனி மார்க்கெட்

ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளிச்சந்தையில் 240 தினசரி கடைகளும், 720 வாரச்சந்தை கடைகளும் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் கட்டுமான பணிகள் தொடங்கியது. சுமார் ரூ.60 லட்சம் செலவில் 4 தளங்களுடன் கூடிய 292 கடைகள் கட்டப்பட்டன. இதையடுத்து கடைகளுக்கான பொது ஏலம் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட வாடகையையும், வைப்பு தொகையையும் குறைக்க வேண்டும் என்றும், ஏற்கனவே கனி மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்க வேண்டும் என்றும் ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதன்படி 60 நாட்களுக்குள் வணிக வளாகத்தை சுற்றியுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

மாற்று இடம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளி வியாபாரிகளுக்கு நோட்டீசு வழங்கினர். இதை கண்டித்து ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கனி மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறோம். அங்கு புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. மேலும், சுற்றியுள்ள கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது. எனவே எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க அமைச்சர் சு.முத்துசாமியிடம் கோரிக்கை வைத்தோம். அவர் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஈரோடு சின்னமார்க்கெட்டில் மாற்று இடவசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று கூறினார். எனவே நாங்களும் அங்கு செல்ல தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்