காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 293 கன அடி தண்ணீர் திறப்பு

காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 293 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,278 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.;

Update: 2022-09-19 18:50 GMT

காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 293 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,278 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

காவேரிப்பாக்கம் ஏரி

தமிழகத்தில் மூன்றாவது பெரிய ஏரியாகவும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மிகவும் பெரிய ஏரியாகவும் விளங்கி வருவது காவேரிப்பாக்கம் ஏரி. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 3,968 ஏக்கர். ஏரி ஒரு முறை நிரம்பி வழிந்தால் சுமார் மூன்று போகம் அறுவடை செய்யலாம் என்பது இந்த ஏரியின் சிறப்பு. இவ்வாறு ஏரி நிரம்பி வழியும் காலங்களில் நரிமதகு, சிங்கமதகு, மூலமதகு, பள்ளமதகு உள்ளிட்ட 10 மதகுகள் வாயிலாக தண்ணீர் திறக்கப்பட்டு, சுமார் 6,278 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வாலாஜா அணைக்கட்டு பகுதியில் இருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு தற்போது 29 அடி உயரம் வரை தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கின்றன. ஆனால் அதன் முழு கொள்ளளவான 30.65 அடியை எட்டவில்லை. இருப்பினும் தற்போது மழைக்காலம் தொடங்கும் முன்பே ஏரியில் 29 அடி உயரம் வரை தண்ணீர் நிரம்பி உள்ளன.

தண்ணீர் திறப்பு

இதனால் அரசு அதிகாரிகள் ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடைவாசல் பகுதியில் உள்ள மதகுகள் மூலம் தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி அய்யம்பேட்டைசேரி ஊர் நாட்டாண்மை தாரர்கள், அன்னியம்மன் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று காலை மஞ்சள், குங்குமம், பூ, தாலி உள்ளிட்ட சீர்வரிசைகளுடன், மேளதாளத்துடன் ஏரிக்கு ஊர்வலமாக வந்தனர்.

அங்கு ஏரிகரையின் உள்பகுதியில் உள்ள அன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆதாரனை செய்து சீர்வரிசைகளை தண்ணீரில் விட்டனர். இதனையடுத்து நீர்வளத்துறை பாசன பிரிவு உதவி பொறியாளர் மெய்யழகன், ஏரியின் கடைவாசல் பகுதியில் உள்ள 30 மதகுகள் வாயிலாக வினாடிக்கு 93 கன அடி தண்ணீர் திறந்து விட்டார்.

6,278 ஏக்கர் விவசாய நிலங்கள்

இதன் மூலம் பெருவளையம், சிறுவளையம், உளியநல்லூர், துறையூர் உள்ளிட்ட 41 ஏரிகள் பயன் பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஏரிக்கு 42 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், பொன்னப்பந்தாங்கல் பகுதியில் உள்ள 9 மதகுகள் வாயிலாகவும் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதனால் மகேந்திவாடி ஏரி நிரம்பி, அதன் கீழ் பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி அதன் மூலம் 6,278 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் துரைபெரும்பாக்கம், உத்திரம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தண்ணீர் திறப்பின்போது கிராம நிர்வாக அலுவலர் ரகு, தி.மு.க. நகர செயலாளர் பாஸ் என்கிற நரசிம்மன், பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்