ராஜஸ்தானில் நிலம் கொடுத்ததால் 28 பேருக்கு வேலை

வடமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கிய விவகாரத்தில் என்.எல்.சி. விளக்கம் அளித்தள்ளது. ராஜஸ்தானில் நிலம் கொடுத்ததால் 28 பேருக்கு வேலை வழங்கியதாக என்.எல்.சி. கூறியுள்ளது

Update: 2023-08-06 18:45 GMT

நெய்வேலி

வடமாநிலத்தைசேர்ந்தவர்களுக்கு வேலை

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனிடையே என்.எல்.சி. நில எடுப்பால் பாதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட நலச்சங்கம் சார்பில் குப்புசாமி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் என்.எல்.சி.க்கு கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதாவது, என்.எல்.சி. நிறுவனத்தில் வீடு, நிலம் கொடுத்தவர்கள் எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள் என கேட்டிருந்தார்.

அதற்கு என்.எல்.சி. அளித்த பதிலுரையில், வேலை வாய்ப்பு வழங்கியதற்கான பட்டியலில் 8.1.1990 முதல் 12.3.2012 வரை வீடு, நிலம் கொடுத்தவர்களில் 862 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதில் 834 பேர் மட்டுமே தமிழர்கள், மீதமுள்ள 28 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டிருந்தது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.

என்.எல்.சி. விளக்கம்

இந்த விவகாரத்தில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக என்.எல்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் 862 பேர் கொண்ட நிலம் மற்றும் குடியிருப்பு வீடு கொடுத்தவர்கள் பட்டியலில் 28 பேருக்கு 1992-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தவறாக வேலை வழங்கப்பட்டுள்ளதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

ராஜஸ்தானில் உள்ள என்.எல்.சி. பர்சிங்சார் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் திட்டங்களுக்காக நிலம் கொடுத்த 28 பேருக்கு என்.எல்.சி. திட்டங்களுக்காக நிலம் வழங்கியவர்கள் பிரிவின் கீழ் வேலை வழங்கப்பட்டது என்று தெளிவு படுத்துகிறோம்.

முழுமையான விவரம்

என்.எல்.சி. இந்தியா அளவிலான நிறுவனமாக இருப்பதைக் கருத்தில் கொள்ளாமலும், உண்மை நிலையை தவறாகக் கருதிதொடர்பில்லாத நபர்களுக்கு, நிலம் வழங்கியவர்கள் பிரிவின் கீழ் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் வேலை வழங்கியதாகவும், பொது மக்களிடையே நிறுவனத்தின் நன்மதிப்பைக் கெடுக்கும் நோக்கத்தில், தவறான செய்தியை பரப்பியிருக்கக்கூடும் என தோன்றுகிறது.

என்.எல்.சி. கடந்து வரும் தற்போதைய பதற்றமான சூழலை மோசமாக்குவதற்காகவும், இந்த தகவல் பரப்பப்பட்டதாகவும் தெரிகிறது. உண்மை தன்மையை தெளிவுபடுத்தும் நோக்கில், மேற்குறிப்பிட்ட நிலம் வழங்கிய 28 பேர் பற்றிய முழுமையான விபரங்களை அளித்துள்ளோம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்