18 சாலைகளை பராமரிக்க 270 தூய்மைப் பணியாளர்கள் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

கள ஆய்வில் சாலைகளில் குப்பைகளை கொட்டிய தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அபராதமாக ரூ.39,000 வசூலிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-02-18 14:15 GMT

சென்னை,

பெருநகர் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் பொது இடங்களில் திடக்கழிவுகளை கொட்டுவது அல்லது தூக்கி எறிவதை தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மாநகராட்சி சார்பில் குப்பையில்லா பகுதிகள் (லிட்டர் பிரீ காரிடார்ஸ்) என்ற திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத் தொட்டிகள் அமைத்தல், சிறிய குப்பைத் தொட்டியுடன் கூடிய மிதி வண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த 66 கி.மீ நீளமுடைய 18 சாலைகளில், 196 பஸ் நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மைப் பணியாளர்கள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தூய்மைப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் குப்பையில்லா பகுதிகள் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சாலைகளில் குப்பைகளை கொட்டிய தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அபராதமாக ரூ.39,000 வசூலிக்ககப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்