பிள்ளையாருக்கு 27 வகையான அபிஷேகம்
பிள்ளையாருக்கு 27 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது.
மலைக்கோட்டை:
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக தொடர்ந்து 14 நாட்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்படி உற்சவ கணபதிக்கு கடந்த 12 நாட்களாக பல்வேறு அலங்காரம், அபிேஷகம் நடைபெற்றது. 13-ம் நாளான நேற்று மதியம் மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவர் கணபதி, மாணிக்க விநாயகர் மூலவருக்கும் திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி, சந்தனாதி தைலம், திரவிய பொடி, அரிசி மாவு, நெல்லி முள்ளி பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, கரும்புச்சாறு, திராட்சை, விளாம்பழம், மாதுளை, அன்னாசி பழம் உள்ளிட்ட பழ வகைகள், அன்னாபிஷேகம், இளநீர், சந்தனம், சொர்ணாபிஷேகம் உள்ளிட்ட 27 வகையான அபிஷேகமும், அதை தொடர்ந்து நர்த்தன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை முடிந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவில் மாணிக்க விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மூலவர், உற்சவருக்கு கோவில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவுபெறுகிறது.