விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம்

விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் நடந்தது.

Update: 2023-09-30 21:22 GMT

மலைக்கோட்டை:

திருச்சி மலைக்கோட்டையில் தாயுமான சுவாமி கோவில் உள்ளது. மேலும் மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. இதில் விநாயகர் சதுர்த்தியன்று மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ எடையிலான ராட்சத கொழுக்கட்டை படையலிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உள்ள உற்சவ கணபதிக்கு பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர் கணபதி, சித்திபுத்தி கணபதி என 12 நாட்கள் பல்வேறு வகையான அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றன. 13-ம் நாளான நேற்று மதியம் மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவர் கணபதிக்கும், மாணிக்க விநாயகர் மூலவருக்கும் திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி, சந்தனாதி தைலம், திரவிய பொடி, அரிசி மாவு, நெல்லி முல்லி பொடி, மஞ்சள் பொடி, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், எலுமிச்சம் பழம், கரும்புச்சாறு, விளாம்பழம், மாதுளை, அன்னாசி பழம் உள்ளிட்ட பழ வகைகள், அன்னாபிஷேகம், வெந்நீர், இளநீர், சந்தனம், சொர்ணாபிஷேகம், பன்னீர் உள்ளிட்ட 27 வகையான அபிஷேகமும், அதைத்தொடர்ந்து நர்த்தன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவில் மாணிக்க விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். 14-ம் நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு மூலவர், உற்சவருக்கு திருக்கோவில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகமும், லட்சார்ச்சனையும் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்