சென்னை விமான நிலையத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்
சென்னை விமான நிலையத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தை மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா நேற்று திறந்துவைத்தார்.;
பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் 2½ லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 அடுக்குகள் கொண்ட 'ஏரோ ஹாப்' என்ற பிரமாண்ட பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 150 கார்களை நிறுத்த முடியும். இருசக்கர வாகனங்களுக்கு தனி இடமும் உள்ளது. மேலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் நிலையங்கள், உணவு விடுதிகள், சில்லரை வணிக கடைகள், சிறுவர்கள் விளையாடும் இடங்கள் உள்பட பல்வேறு வசதிகளும் உள்ளன.
திறப்பு விழா
இந்த வாகன நிறுத்துமிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்று வாகன நிறுத்துமிடத்தை திறந்துவைத்தார்.
விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டாக்டர் கனிமொழி சோமு, இந்திய விமான நிலைய ஆணையக தலைவர் சஞ்சீவ் குமார், சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது:-
விரிவுபடுத்தும் பணி
சென்னை விமான நிலையம் கடந்த ஆண்டு 23 மில்லியன் பயணிகளை கையாண்டு உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 36 விமான சேவை என உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 35 மில்லியன் பயணிகளை கையாளவும், ஒரு மணி நேரத்திற்கு 45 விமான சேவை எனவும் அதிகரிக்கும்.
சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல்கட்ட பணி முடிந்து இந்த ஆண்டும், 2-ம் கட்ட பணிகள் அடுத்த ஆண்டு இறுதியிலும் முடிந்து தயாராகிவிடும்.
தமிழ்நாட்டில் 9 விமான நிலையங்கள் உள்ளன. விரிவாக்கம் மற்றும் புதிய விமான நிலைய பணிகளில் ஈடுபட்டு உள்ளோம். இதற்கு மாநில அரசு முன்வர வேண்டும். விமான நிலைய விரிவாக்கம் மற்றும் புதிய விமான நிலையம் ஆகியவற்றில் மாநில அரசை விட மத்திய அரசு அதிக ஆர்வத்துடன் உள்ளது.
வாட் வரி
தமிழ்நாடு அரசு விமான எரிபொருள் மீதான வாட் வரியை 29 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைத்தால் விமான கட்டணம் தாமாக குறையும்.
2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 12 மாநிலங்கள் 1 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே வாட் வரியை வசூலித்தன. ஆனால் 7 மாநிலங்களில் 25 முதல் 30 சதவீதமாக வாட் வரி உள்ளது. அதில் தமிழ்நாடு உள்ளது. வாட் வரியை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் உருக்காலை
விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், 'சென்னை 2-வது விமான நிலையத்திற்கான நிலம் உரிய நேரத்தில் கையகப்படுத்தி கொடுக்கப்படும்' என்றார்.
டி.ஆர்.பாலு பேசுகையில், 'சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது. சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்த்தால் உடனடியாக இன்னொரு விமான நிலையம் வேண்டும். 200-300 ஏக்கர் நிலம் வேண்டும் என கேட்டுள்ளீர்கள். இந்த சிக்கலை தமிழ்நாடு அரசு சரி செய்யும். மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும்' என்று தெரிவித்தார்.