கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

பெரம்பலூரில் கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க விரைவு பார்சல் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.;

Update: 2022-12-26 19:45 GMT

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பார்சல்

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார்(வயது 32). இவர் புதிய பஸ் நிலையம் அருகே மெஷினரி எக்யூப்மென்ட்ஸ் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மோகன்குமார், தனது கடையில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா மூலனூரை சேர்ந்த சூரி என்ற வாடிக்கையாளருக்கு கம்பிரசருக்கு பயன்படுத்தும் துளையிடும் கருவிக்குரிய பாகங்கள் அடங்கிய ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பார்சலை அனுப்புவதற்காக பெரம்பலூர் நான்கு ரோடு அருகே இயங்கிவரும் கே.பி.என். விரைவு பார்சல் சேவை நிறுவனத்தில் கடந்த 28.6.2021 அன்று முன்பதிவு செய்தார். ஆனால் அந்த பார்சல் சூரிக்கு பலநாட்கள் கடந்தும் சென்றடையவில்லை. இதுகுறித்து வாடிக்கையாளர் சூரி, மோகன்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, தாங்கள் அனுப்பிய பார்சல் வரவில்லை என்று தெரிவித்தார்.

வழக்கு

இதுதொடர்பாக மோகன்குமார், பார்சல் சேவை நிறுவன நிர்வாகியிடம் சென்று முறையிட்டார். தவறுதலாக வேறு முகவரிக்கு சென்றுவிட்ட அந்த பார்சலை கண்டுபிடித்து சேர்ப்பிக்கிறோம் என்று பதில் தெரிவித்தனர். ஆனால் அந்த பார்சலை வாடிக்கையாளரின் உரிய முகவரிக்கு சென்று சேர்க்கவில்லை. அனுப்பிய நிறுவனத்திற்கும், திரும்பி வரவில்லை. பார்சலின் நிலை என்னவென்றே மோகன்குமாருக்கு தெரிவிக்கவில்லை. இதனால் மனஉளைச்சல் அடைந்த மோகன்குமார், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் தனது வக்கீல்கள் செல்வராஜன், சண்முகசுந்தரம் வாயிலாக கே.பி.என். விரைவு பார்சல் சேவை நிறுவனத்தின் பெரம்பலூர் நிர்வாகி, சேலத்தில் உள்ள பார்சல் சேவை நிறுவனத்தின் தலைமையிட நிர்வாகி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.

இழப்பீடு வழங்க உத்தரவு

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் மோகன்குமாரை அலைக்கழியச்செய்து, மனஉளைச்சல் ஏற்படுத்தியமைக்காக கே.பி.என். விரைவு பார்சல் சேவை நிறுவனம் மோகன்குமாருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவிற்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும். மேலும் மோகன்குமார் முன்பதிவு செய்த பார்சலை தேடிக்கண்டுபிடித்து ஒப்படைக்குமாறும் நீதிமன்ற நீதிபதி ஜவஹர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்