நிதிநிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

நாமக்கல்லில் பட்டப்பகலில் தனியார் நிதி நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2023-05-19 19:23 GMT

நிதிநிறுவன அதிபர்

நாமக்கல் டவுன் முல்லை நகரில் வசித்து வருபவர் நம்பி (வயது 41). சேந்தமங்கலம் ரோட்டில் தனியார் நிதிநிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரீனா. இவர்களுக்கு வியன் (9) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று மாலை 4 மணியளவில் வீட்டில் இருந்து நம்பி குடும்பத்தினர் வெளியே சென்று உள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் வீடு திரும்பியபோது வீட்டின் இரும்பு கதவில் இருந்த பூட்டும், கதவும் உடைக்கப்பட்டு கிடந்ததை பாா்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

25 பவுன் நகை கொள்ளை

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த செயின்கள், தங்க காசுகள் உள்பட 25 பவுன் நகைகளும், ரூ.50 ஆயிரம் பணமும் கொள்ளை போயிருந்ததாக கூறப்படுகிறது. அதோடு வீட்டில் இருந்த பொருட்களும் கலைந்து கிடந்தன. இதுகுறித்து அவா் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில் நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சந்தேகிக்கும் வகையில் மர்மநபர் ஒருவர் முல்லை நகர் பகுதியில் நடமாடி இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் பட்டப்பகலில் தனியார் நிதி நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்