சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ரூ.25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில்ரூ.25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.;
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவில் வாரந்தோறும் திங்கள், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திறந்திருக்கும். உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்தது. இந்த அபிஷேகம் மே 22-ந்தேதி முடிவடைந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி 3 தற்காலிக கோவில் உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, சரக ஆய்வாளர்கள் தீபாதேவி, வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக 3 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவை எடுக்கப்பட்டு தனித்தனியாக எண்ணப்பட்டது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க ஆன்மிக மெய்யன்பர்கள் 47 பேரும், கோவில் பணியாளர்கள் உள்பட 60 பேர் ஈடுபட்டனர். இதில் ரூ.25 லட்சம் பணமும், 192 கிராம் தங்கமும், 148 கிராம் வெள்ளியும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.