ரூ.24 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம்

மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் கட்ட ஒப்புதல் அளித்து நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-10-28 18:45 GMT

மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் கட்ட ஒப்புதல் அளித்து நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவசர கூட்டம்

மயிலாடுதுறை நகரசபை அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை நகரில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக கடந்த 16-ந் தேதி டெண்டர் விடப்பட்டிருந்தது.

இந்த பணிக்கான ஒப்புதல் கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டது அந்த தீர்மானம் ஒருமனதாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நகரசபை உறுப்பினர்கள் பேசியதாவது:-

ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு

நடராஜன் (தி.மு.க.):-மயிலாடுதுறை மக்களின் 34 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இடம் வழங்கிய தருமபுர ஆதீனத்திற்கும் மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நகர சபை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கணேசன் (ம.தி.மு.க.):- புதிய பஸ் நிலையத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்ட பின்னர் பொது நிதியில் இருந்து ஒரு கோடி கூடுதலாக புதிய பஸ் நிலையத்திற்காக ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன? நகரில் பல சாலைகள் மோசமாக உள்ளன. அதனை சீரமைக்க இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாமே. புதிய பஸ் நிலைய கட்டிடம் தரமாக கட்டும் வகையில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

செல்வராஜ்(தலைவர்):- நகராட்சிக்கு சிறப்பு நிதி வருகிறது. அதில் நாம் இந்த தொகையை அளிக்க உள்ளோம்.

ராமச்சந்திரன் (அ.தி.மு.க.):- முதன் முதலில் பஸ் நிலையம் அமைய இடம் அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தற்போது நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

செல்வராஜ்(தலைவர்):- முதன் முதலில் இடம் தேர்வு செய்து அதற்கான தீர்மானம் நிறைவேற்றியது மக்களால் தேர்வு செய்யப்பட்ட தி.மு.க. நகர சபையில் தான்.அ.தி.மு.க. ஆட்சியில் தனியார் பங்கேற்புடன் பஸ் நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டதால். அப்போது டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை. தற்போதைய தமிழக முதல்-அமைச்சரிடம் எடுத்துக் கூறி அதனை அவர் கனிவோடு ஏற்று முழுமையாக மானியத்துடன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்காக முதல்-அமைச்சர், உறுதுணையாக இருந்த அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும், ஒத்துழைப்பு தந்த நகர சபை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பேசினர். முடிவில் நகர சபை துணைத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்