தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் திருடிய 23¼ பவுன் நகை மீட்பு -3 பேர் கைது

தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் திருடிய 23¼ பவுன் நகையை ரெயில்வே போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

Update: 2023-06-30 22:11 GMT

தாம்பரம்,

சென்னை பெருங்குடி எம்.ஜி.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பையா சுரேஷ் (வயது 25). இவர், கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி அதிகாலை 4.30 மணியளவில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது குடும்பத்துடன் மதுரையில் இருந்து தாம்பரம் வந்தார். இவர் வீட்டுக்கு சென்ற பின்னர் தனது உடைமைகளை சோதனை செய்தார்.

அப்போது, தனது லேப்டாப் பையில் இருந்த 19 பவுன் நகைகள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், சுப்பையா சுரேஷின் பையில் இருந்து நகைகளை திருடிக்கொண்டு வேக வேகமாக ஒருவர் வெளியேறுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து பழைய குற்றவாளிகளின் புகைப்படத்துடன், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த நபரின் புகைப்படம் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அதில், ஜெகதீஷ் என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

3 பேர் கைது

2 மாதமாக போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஜெகதீஷ் மற்றும் அவருடைய கூட்டாளியான மண்ணையா இருவரையும் ரெயில்வே போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர், இருவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மண்ணையா, ஜெகதீஷ் திருடிய நகைகளை விற்றுக்கொடுக்கும் தரகராக செயல்பட்டுள்ளார். நகைகளை வினோத்குமார் என்பவரிடம் கொடுத்ததாகவும் கூறினர். மண்ணையா கொடுத்த தகவலின் பேரில், பர்மா பஜாரில் இருந்த வினோத்குமாரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 19 பவுன் நகைகளை மீட்டனர்.

இதேபோல, கும்பகோணத்தை சேர்ந்த சுந்தரி (56) என்பவர் கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கும்பகோணத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் வந்தார். எழும்பூர் ரெயில் நிலையம் வந்து பார்த்த போது தனது டிராலி பேக் காணவில்லை என்றும், அதில், 4½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் இருந்ததாகவும் எழும்பூர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ஜெகதீஷிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் திருடியதாக ஒப்புக்கொண்டார். பின்னர், அவரிடம் 4¼ பவுன் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். மொத்தம் 2 வழக்குகளிலும் 23¼ பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்