செந்நாய்கள் கடித்து 23 ஆடுகள் செத்தன
அஞ்செட்டி அருகே செந்நாய்கள் கடித்து 23 ஆடுகள் ெசத்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.;
தேன்கனிக்கோட்டை
ஆடுகள் செத்தன
தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி அருகே உள்ள சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ். அதேபகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. விவசாயிகளான இவர்கள் ஆடுகள் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு மாலை வீட்டு அருகில் கொட்டகைக்குள் அடைத்து வைத்திருந்தனர்.
ஜவளகிரி அருகே உள்ள உளிபெண்டா வனப்பகுதியில் இருந்து வந்த செந்நாய்கள் மாதேசின் 20 ஆடுகளையும், கிருஷ்ணப்பாவின் 3 ஆடுகளையும் கடித்து குதறின. இதில் மொத்தம் 23 ஆடுகள் செத்தன. இதனால் அவர்கள் கவலை அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனச்சரகர் சுகுமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
கண்காணிப்பு பணி
அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த செந்நாய்கள் கூட்டம் கடித்து குதறியதில் ஆடுகள் செத்தது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவர் பாரதிதாசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். செந்நாய்கள் கூட்டம் மீண்டும் திரும்பி வர வாய்ப்புள்ளதால் சூளகுண்டா வனவர் ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.