22 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் அபாயம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 22 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.;
விவசாயிகளுக்கு உதவித்தொகை
மத்திய அரசு சார்பில், பிரதமரின் கிசான் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதற்காக விவசாயிகளின் வங்கி கணக்கு எண், ஆதார் எண், செல்போன் எண் ஆகியவை பெறப்பட்டு இருந்தன. இந்த விவரங்களின் அடிப்படையில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர் உதவித்தொகை வாங்கினர். ஆனால் விவசாய நிலம் இல்லாமல் உதவித்தொகை பெற்றது தெரியவந்தது.
ஆதாரை இணைக்கவில்லை
இதையடுத்து தகுதியான விவசாயிகளை தவிர மற்றவர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 86 ஆயிரம் பேர் உதவித்தொகை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஆதார் எண் அடிப்படையில் உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வங்கி கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 ஆயிரம் பேர் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தும், கைரேகை பதிவு மூலம் புதுப்பிக்கவில்லை. இதேபோல் 10 ஆயிரம் பேர் தங்களுடைய வங்கி கணக்கில் ஆதாரை இணைக்கவில்லை.
உதவித்தொகை நிறுத்தம்?
இவர்கள் அனைவரும் வங்கி வசதி இல்லாத குக்கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே இவர்களுக்கு ஆதார் மூலம் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு தொடங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளின் விவரம் தபால் துறைக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர 4 ஆயிரம் பேர் தந்தை பெயரில் இருக்கும் விவசாய நிலத்தில் விவசாயம் செய்வது கண்டறியப்பட்டது.
எனவே அவர்கள் தந்தையின் பெயரில் இருக்கும் நிலத்தை தனது பெயரில் மாற்றி, ஆவணத்தை பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதை மேற்கொள்ளாதபட்சத்தில் 22 ஆயிரம் பேருக்கும் உதவித்தொகை நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.