பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசார் குவிப்பு

பஸ்-ரெயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2024-01-18 15:55 GMT

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். நாளை மாலை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் சென்னை விமானம் நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து 'ஹெலிகாப்டர்' மூலம் நேப்பியர் பாலம் அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வருகிறார். வழிநெடுக பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம், பிரதமர் தங்கும் கவர்னர் மாளிகை, அவர் சாலை மார்க்கமாக செல்லும் பகுதிகள், நிகழ்ச்சி நடைபெறும் பகுதி போன்றவற்றில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, அஸ்ரா கார்க் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள லாட்ஜூகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர சோதனையை இன்று முதல் நடத்தி வருகிறார்கள். பஸ்-ரெயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேரு விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள பெரியமேடு பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜிகளும் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது. நேரு விளையாட்டு அரங்கத்தில் போலீசார் அவ்வப்போது மோப்பநாய் மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பிரதமரின் வருகையையொட்டி குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன் கீழ் சென்னையில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் என 2 நாட்கள் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்