பஸ்சில் ஏறிய பெண்ணின் பையில் இருந்த 22 பவுன் திருட்டு
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏறிய பெண்ணின் பையில் வைத்திருந்த 22 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏறிய பெண்ணின் பையில் வைத்திருந்த 22 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி விடுமுறை
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுடர்மணி மனைவி சத்யா (வயது31). இவரது கணவர் சுடர்மணி தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். மயிலாடுதுறையில் பள்ளியில் படிக்கும் தனது குழந்தைக்கு விடுமுறை என்பதால் பள்ளியில் இருந்து குழந்தையை அழைத்துக்கொண்டு பந்தநல்லூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். மேலும் தாயார் வீட்டில் ஒரு வாரம் தங்குவதற்கு செல்வதால் தன் வீட்டில் வைத்திருந்த மோதிரம், செயின், தோடு, நெக்லஸ், டாலர் செயின் உள்ளிட்ட 22 பவுன் நகையை வீட்டில் வைத்திருந்தால் திருடு போய்விடுமோ என்ற அச்சத்தில் அதை கையில் எடுத்து கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில், மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த போது பந்தநல்லூர் வழியாக திருப்பனந்தாள் செல்லும் தனியார் பஸ் வந்துள்ளது. கூட்ட நெரிசலில் அந்த பஸ்சில் சத்யா தனது குழந்தையுடன் ஏறியதும் தனது பையை பார்த்துள்ளார்.
22 பவுன் திருட்டு
அப்போது கையில் வைத்திருந்த பை திறந்துகிடந்துள்ளது. இதையடுத்து பையை பார்த்தபோது அதில் இருந்த 22 பவுன் நகைகள் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். உடனடியாக பஸ் நிலையத்தில் இருந்து போலீசார் பஸ்சில் இருந்த பயணிகள் யாரையும் கீழே இறங்கவிடாமல் பஸ்சை மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பஸ் பயணிகளை ஒவ்வொருவராக இறங்கசொல்லி சோதனை செய்ததோடு பஸ் முழுவதும் தேடி பார்த்தனர். ஆனாலும் நகை கிடைக்கவில்லை.
இது குறித்து சத்யா அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பஸ்சின் உள்ளே உள்ள கண்காணிப்பு கேமரா, பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் வைத்து போலீசார் நகையை திருடியவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.