பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வெம்பக்கோட்டை பகுதியில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது வெம்பக்கோட்டை செவல்பட்டி ரோட்டில் ஒரு இடத்தில் தலா 50 கிலோ கொண்ட 21 மூடைரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்பகுதியில் விசாரணை நடத்திய போது தென்காசி மாவட்டம் சிவலார்குளத்தை சேர்ந்த சுபாஷ் என்ற சட்டை சுபாஷ் (வயது 35) என்பவர் இந்த அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில் அந்த இடத்திற்கு வந்த சுபாசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கு முன்பு 2 அரிசி கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய இவரை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.