2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழித்து கட்டுவதே இலக்கு - மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார் உறுதி

''2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழித்து கட்டுவதே இலக்கு'' என மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார் உறுதிபட தெரிவித்தார்.

Update: 2022-12-27 01:46 GMT

சென்னை,

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக மருத்துவ ஆவண காப்பகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ ஆவண காப்பகத்தை, மத்திய அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரி பாரதி பிரவீன் பவார் நேற்று இரவு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து ஆவண காப்பகத்தை அவர் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து மருத்துவக்குழுவினரிடம் கேட்டறிந்தார். பின்னர் காசநோய் தாக்கம், மேம்பட்ட சேவை மற்றும் ஆராய்ச்சி பணிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பத்மபிரியதர்ஷினி மற்றும் வல்லுனர் குழு அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு பழமையான நிறுவனம் ஆகும். பல்வேறு துறைகளில் இதன் செயல்பாடுகள் அளப்பரியது. காசநோய் பிரிவில் நோய் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் தடுத்தல் ஆகிய 3 பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. தற்போது புதிய தொழில்நுட்ப உதவியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2025-ம் ஆண்டுக்குள் காசநோயை பெருமளவில் குறைக்க வேண்டும் மற்றும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உறுதி பூண்டிருக்கிறார். அதற்கான முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறோம்.

பிரேசில், சீனா, ஜப்பான், கொரியா நாட்டில் கொரானா அதிகரித்து வருகிறது. நாங்கள் ஏற்கனவே இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டோம். ஆக்சிஜன், மருந்து, பி.பி.கிட் மற்றும் எல்லா மருத்துவ உபகரணங்கள் இருப்பையும் சரிபார்த்து வருகிறோம். கொரோனா குறித்து மிகவும் விழிப்பாக இருக்கிறோம். அனைத்து வகையிலும் தயாராகவே இருக்கிறோம்.

பொதுமக்களும் முக கவசம் அணிவதால் மட்டுமே கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒவ்வொருவரும் விழிப்பாக இருக்கவேண்டும். தங்கள் உடல்நலனை காத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.        

Tags:    

மேலும் செய்திகள்