சிவகாசியில், ஆடிப்பெருக்கையொட்டி 2024-ம் ஆண்டு காலண்டர் மாடல்கள் வெளியீடு

ஆடிப்பெருக்கையொட்டி நேற்று சிவகாசியில் 2024-ம் ஆண்டு காலண்டர் மாடல்கள் வெளியிடப்பட்டன. பட்டாசு கடைகளில் விற்பனைக்கான புதுக்கணக்கு தொடங்கும் நிகழ்ச்சியும் நடந்தன

Update: 2023-08-03 19:01 GMT

சிவகாசி

ஆடிப்பெருக்கையொட்டி நேற்று சிவகாசியில் 2024-ம் ஆண்டு காலண்டர் மாடல்கள் வெளியிடப்பட்டன. பட்டாசு கடைகளில் விற்பனைக்கான புதுக்கணக்கு தொடங்கும் நிகழ்ச்சியும் நடந்தன.

தொழில்நகரம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சுமார் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், 1300 பட்டாசு கடைகள், 300-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் இயங்கி வரும் நிலையில் தற்போது ஆடிப்பெருக்கையொட்டி நேற்று பட்டாசு கடைகளில் பூஜை நடத்தப் பட்டு இந்த ஆண்டு விற்பனைக்கான புதுக்கணக்கு தொடங்கப்பட்டது. ஏராளமான கடைகளில் இந்த புதுக்கணக்கு தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெளி மாநில, வெளியூர் மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்

காலண்டர்

இதேபோல் 2024-ம் ஆண்டுக்குரிய காலண்டர் உற்பத்தியின் முதல் கட்ட பணிகள் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் நேற்று அடுத்த ஆண்டிற்கான காலண்டர் மாடல்கள் வெளியிடப்பட்டன.

இதனை இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள காலண்டர் மொத்த வியாபாரிகள் பெற்றுக்கொண்டு தங்களுக்கு தேவையான காலண்டர்களை ஆர்டர் கொடுத்தனர். அடுத்து வரும் 4 மாதங்கள் சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெறும்.

சூடுபிடிக்க.....

சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு கடைகளில் தற்போது இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசு விற்பனை தொடங்கி உள்ளது. விலை பட்டியல் தயாரிக்கப்பட்டு வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் வியாபாரிகள் அடுத்து வரும் நாட்களில் இந்த ஆண்டுக்கு தேவையான பட்டாசு ஆர்டர் கொடுப்பார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் விலை உயர்வு இருக்கும் என்று பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்தார். மொத்தத்தில் சிவகாசியில் காலண்டர் உற்பத்தி, பட்டாசு விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்