டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
எச்சில் துப்பியதில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
எச்சில் துப்பியதில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்விரோத தகராறு
புதுச்சேரி முதலியார்பேட்டை ராமலிங்கம் அடிகளார் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 36). டிரைவர். இவர் அங்குள்ள வீட்டில் 2-வது மாடியில் வசித்து வருகிறார்.
இந்த வீட்டின் எதிர்வீட்டு முதல் மாடியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அருள்செல்வன் (28) வசிக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
அரிவாள் வெட்டு
இந்த நிலையில் மகாலிங்கம் தனது வீட்டின் மாடியில் இருந்து எச்சில் துப்பியுள்ளார். அது அருள்செல்வன் குடும்பத்தினர் மீது பட்டதாக கூறப்படுகிறது.இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
அருள் செல்வன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாகாலிங்கத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கழுத்து, தலை, கையில் வெட்டு விழுந்தது. இந்த கொலைவெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் அருள் செல்வன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வலைவீச்சு
வெட்டுக்காயம் அடைந்த மகாலிங்கம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்செல்வனை வலைவீசி தேடி வருகின்றனர்.