காவிரி டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகள் கொண்டு வர முடியாது- எடப்பாடி பழனிசாமி

வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த தொழிற்சாலைகளும் கொண்டு வர முடியாது என்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2022-05-14 00:34 GMT
இலவச தையல் பயிற்சி மையம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் இலவச தையல் பயிற்சி மையம் சேலம் 5 ரோடு மெய்யனூர் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தையல் பயிற்சி மையத்தை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசு இரட்டை வேடம்

சொத்து வரி 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இது மக்களுக்கு பெரிய சுமை. தி.மு.க. அரசு மக்களுக்கு துரோகம் செய்து விட்டது. விவசாயிகள் பாதிக்ககூடாது என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. அரசு வேளாண் மண்டலம் கொண்டு வந்தது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த தொழிற்சாலையும் அமைக்க முடியாது. மு.க.ஸ்டாலின் நினைத்தாலும் டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலை கொண்டு வர முடியாது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலை கொண்டு வரப்போவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முதல்-அமைச்சர் முயல்கிறார். இதன்மூலம் பாமர மக்களையும், படித்தவர்களையும் தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், வந்த பின்புமாக தி.மு.க. அரசு இரட்டை வேடம் போடுகிறது.

பழைய ஓய்வூதிய திட்டம்

ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தலின் போது தி.மு.க. வாக்குறுதி அளித்தது. இதை நம்பி 16 லட்சம் அரசு ஊழியர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆனால் அரசு ஊழியர்களை நம்ப வைத்து தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது. அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியம் இல்லை.

நிதி ஆதாரத்தை பெருக்க எந்த திட்டமும் இல்லை. கட்டுமான பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவில் உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.290 ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட், தற்போது ரூ.490 ஆக உயர்ந்து உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.32 ஆயிரமாக இருந்த ஒரு டன் கம்பி தற்போது ரூ.92 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகள்