தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது:-
உள்துறை சரியாக செயல்பட்டால், மற்ற துறைகளும் சரியாக செயல்படும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மாநில வளர்ச்சி சரியாக இருக்கும். திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, சாதி சண்டைகள் இல்லை, துப்பாக்கிச்சூடுகளும் இல்லை. காவல்துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும்.
தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை. காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஓரிரு சம்பவங்களை வைத்து காவல்துறையை விமர்சிக்க வேண்டாம். காவலர்கள் மீது அரசுக்கு அக்கறை உள்ளது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், சிபாரிசுகளுக்கு இடம் தராமல் சட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும். காவல்துறையினர் விமர்சனத்திற்கு இடம் கொடுக்காமல் பணி செய்ய வேண்டும். அரசின் நோக்கம் குற்றத்தை தடுப்பதே; ஓராண்டில் காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டுள்ளோம். இது நம்ம போலீசார் என்ற உணர்வு ஏற்படுள்ளது. குற்றங்களை தடுக்க முன்னுரிமை என அறிவித்து செயல்படுத்துகொறோம்.
எந்த சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரக்கூடிய சம்பவங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் கலவரம் செய்ய நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறவில்லை. சமூக வலைதளங்களில் வன்முறை பேச்சுக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூலிப்படைகளின் அட்டகாசத்திற்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கூலிப்படைகள் விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும்.
விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது; விசாரணைக்கு அழைத்து வருவோரை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை விசாரணையில் காட்டக்கூடாது. விசாரணைக்காக ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வரும்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை காவலர்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.