வீட்டிற்க்கு குழாய் அமைக்க ரூ. 1500; பொதுமக்களிடம் நூதன முறையில் மோசடி..!
அருப்புக்கோட்டை அருகே பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு பகுதியை சேர்ந்தவர் வைரவேல். இவரது மனைவி ரோஜாமணி(வயது 43). இவரிடம் மர்மநபர் ஒருவர் தன்னை குடிதண்ணீர் குழாய் அமைக்கும் ஒப்பந்த பணியாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வீடு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தங்கள் வீட்டு அருகே குழாய் அமைக்க ரூ. 1,500 தர வேண்டும் என கேட்டுள்ளார்.
இதை நம்பிய ரோஜா மணி அந்த நபரிடம் ரூ.1,500 வழங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த குணவதி என்ற பெண் அந்த நபர் ஏற்கனவே சென்ற மாதம் தன்னிடம் ஏமாற்றி பணம் பெற்றதாக கூறி உள்ளார்.
இதனால் சுதாரித்துக்கொண்ட இருவரும் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்து டவுன் போலீஸ் நிலையத்தில் பிடித்து ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அந்த நபர் விருதுநகர் ஆர்.ஆர்.நகர் ஆவுடையாபுரம் பகுதியைச் சேர்ந்த கூடலிங்கம் (வயது 50). இவர் பல இடங்களில் நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து கூடலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.