`தண்ணீர் பந்தலில் தண்ணீர் இல்லை’- மது போதையில் தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த டிரைவர்...!

தே.மு.தி.க தலைமை அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு மர்ம நபரால் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2022-05-08 03:53 GMT
போரூர்,

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் கடந்த 5-ம் தேதி நள்ளிரவு மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

கட்சி அலுவகம் முன்பு தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் தே.மு.தி.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். 

அதில் கால் டாக்சி காரில் வந்த வாலிபர் ஒருவர் தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்துவிட்டு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில் காருக்கு தீ வைத்தது வேளச்சேரி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ராமு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று இரவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் வந்த ராமு தாகம் ஏற்பட்டு தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீர் பந்தலில் தண்ணீர் இல்லை இதனால் ஆத்திரமடைந்த ராமு தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்