திமுக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு: அரசு பஸ்சில் பயணம் செய்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

மெரினா கடற்கரை செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

Update: 2022-05-07 04:10 GMT
சென்னை,

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளது.

அந்த வகையில், திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள தனது தாயார் தயாளு அம்மாள் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அண்டை வீட்டாரிடமும் வாழ்த்து பெற்றார். 

இதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியில் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக காரில் சென்றார். 

ராதாகிருஷ்ணன் (ஆர்கே) சாலையில் சென்றபோது காரில் இருந்து கிழே இறங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வழியாக வந்த ஒரு அரசு பஸ்சில் திடீரென ஏறி பயணித்தார்.

முதல்-அமைச்சர் அரசு பஸ்சில் திடீரென ஏறியதால் பஸ்சில் இருந்த பயணிகள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். பஸ் கண்டெக்டரிடம் பஸ் பயணம் விவரம் குறித்து கேட்டறிந்தார். 

பின்னர், பெண் பயணி ஒருவரிடம், திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் குறித்து கருத்து கேட்டார். 

அப்போது பேசிய அந்த பெண், இந்த திட்டத்தால் நாங்கள் நல்ல பயன் அடைந்துள்ளோம். இந்த திட்டத்திற்கு உங்களுக்கு நன்றி என கூறினார். அதேவேளை, வெள்ளை பலகை (ஒயிட் பொர்ட்) பஸ்களின் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது. அதை உயர்த்த வேண்டும்’ என்றார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த முதல்-அமைச்சர் அடுத்த நிறுத்தத்தில் பஸ்சில் பயணத்தை முடித்து பின்னர் காருக்கு திரும்பினார்.

இதனை தொடர்ந்து காரில் பயணம் செய்து சென்னை மெரினா கடற்கரைக்கு முதல்-அமைச்சர் சென்றடைந்தார். அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்