சேலம்: பெண்ணிடம் ரூ. 1 லட்சத்தை பறித்து சென்ற கொள்ளையர்கள்- போலீசார் விசாரணை....!
ஆத்தூர் அருகே பெண்ணிடம் ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர பகுதிக்குட்பட்ட சாத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மங்கையர்கரசி. இவர் புன்னகை என்ற மகளிர் குழுவை நடத்தி வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் பிரதிநிதியாகவும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி ஆத்தூர் காமராஜர் சாலையில் உள்ள ஸ்டேட் வங்கியில் மகளிர் குழுவின் பணத்தை வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயித்தை எடுத்துக் கொண்டு மங்கையர்கரசி, செல்வி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது மகளிர் காவல் நிலையம் அருகே மர்மநபர்கள் மங்கையர்க்கரசி முதுகில் ரசாயன பவுடரை பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அருகே உள்ள டீ கடையில் மங்கையர்கரசி இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணம் வைத்திருந்த பையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் மங்கையர்க்கரசி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து காமராஜர் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் குற்றவாளிகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படத்தையும் போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர். வீடியோவில் ஒருவர் உட்கார்ந்து இருந்து பையை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
இதனைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்