கஞ்சா விற்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை போலீஸ் ஐ ஜி சந்திரன் எச்சரிக்கை

கஞ்சா விற்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் ஐ.ஜி. சந்திரன் எச்சரித்துள்ளார்.

Update: 2022-05-05 15:15 GMT
புதுச்சேரி
கஞ்சா விற்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் ஐ.ஜி. சந்திரன் எச்சரித்துள்ளார்.

ஆலோசனை

புதுவையில் கஞ்சா புழக்கத்தை ஒழித்துக்கட்ட போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்தநிலையில் கஞ்சா, போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க போலீஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் காவல்துறை தலைமையகத்தில் நடந்தது. போலீஸ் ஐ.ஜி. சந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், கார்த்திகேயன், ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், கலையரசன், குமரவேல் உள்பட போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

எச்சரிக்கை

இதைத்தொடர்ந்து போலீஸ் ஐ.ஜி.சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கஞ்சா விற்பனை தடுக்க தீவிரம் காட்டி வருகிறது. 
கஞ்சா விற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் கஞ்சா வழக்கில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கஞ்சா விற்பனை செய்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர் தங்களின் குழந்தைகள் போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்