திருபுவனை பாளையத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்

திருபுவனை பாளையத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.;

Update: 2022-05-05 14:07 GMT
திருபுவனை
திருபுவனை பாளையத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 

பிளாஸ்டிக் தொழிற்சாலை

திருபுவனை அருகே திருபுவனை பாளையத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 3 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. தொழிற்சாலையில் இருந்த கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி எரிந்தன.
இதனால் தொழிற்சாலையில்    பணிபுரிந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு கரும்புகை பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். 

எரிந்து நாசம்

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் திருபுவனை, திருக்கனூர், மடுகரை, வில்லியனூர் பகுதிகளில் இருந்து 8 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால், அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்