பிளஸ் 2 தேர்வுகள் நாளை தொடக்கம் தேர்வு மையங்களை கண்காணிக்க 23 பறக்கும் படைகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் கண்காணிக்க 23 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-05-04 14:46 GMT
புதுச்சேரி
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் கண்காணிக்க 23 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 தேர்வுகள்

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு பொதுத்தேர்வுகளும் நேரடியாக நடத்தப்படுகிறது. இதன்படி  நாளை (வியாழக்கிழமை) பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன.
மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தேர்வு மையங்களை தயார்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்வு எழுதும் அறைகளில் மாணவர்களின் வரிசை எண்கள் எழுதப்பட்டு தேர்வு கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. தேர்வின்போது மின்தடை ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

15 ஆயிரம் மாணவர்கள்

இந்தநிலையில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2021-22-ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ்-2 தேர்வுகள்  நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரையும், பிளஸ்-1 தேர்வுகள் 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் 8-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரையும் நடைபெற உள்ளது.
பிளஸ்-2 தேர்வை 6 ஆயிரத்து 972 மாணவர்கள், 7 ஆயிரத்து 655 மாணவிகள் என 14 ஆயிரத்து 627 பேரும், பிளஸ்-1 தேர்வை 7 ஆயிரத்து 333 மாணவர்கள், 7 ஆயிரத்து 812 மாணவிகள் என 15 ஆயிரத்து 145 பேரும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 8 ஆயிரத்து 530 மாணவர்கள், 8 ஆயிரத்து 272 மாணவிகள் என 16 ஆயிரத்து 802 பேர் எழுதுகின்றனர்.
பறக்கும் படைகள்
மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக 124 மையங்களும் தனித்தேர்வர்களுக்கு 8 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வின்போது முறைகேடுகளை கண்காணிக்க 23 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்