சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 57). இவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு தொழிற்சாலையில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. வழக்கம்போல் இன்று காலை பட்டாசு ஆலை திறந்து பணிக்கு தேவையான மருந்துகளை கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டமானது. இதில் சுந்தரக்குடும்பன்பட்டியை சேர்ந்த சோலை விக்னேஷ் (26) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அம்மாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தின் போது ஏற்பட்ட தீயை அணைத்து கட்டிட இடிபாடுகளில் யாரும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.