“சமஸ்கிருதத்தை திணிக்க ஒரு கூட்டம் முனைந்திருக்கிறது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவத்துறையில் சமஸ்கிருத உறுதிமொழியை திணிக்க ஒரு கூட்டம் முனைந்திருப்பதாக மக்கல் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருத மொழியைச் சேர்ந்த சரக் சபத் என்ற உறுதிமொழியை ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது;-
“இப்போகிரேடிக் உறுதிமொழி என்பது மனிதநேய அடிப்படையிலானது. மகரிஷி சரக் சபத் என்பது சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சொல்லப்பட்டாலும், எதிர்காலத்தில் அதை சமஸ்கிருதத்தில் தான் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.
அது போன்ற நிலை வந்தால், அது மொழி திணிப்பாக ஆகிவிடும். தமிழகத்தில் மொழி திணிப்பு கூடாது என்பது முதல்-அமைச்சரின் விருப்பமாகும். மகரிஷி சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழியை இந்தியா முழுவதும் திணிப்பதற்கு ஒரு கூட்டம் முனைந்திருக்கிறது.”
இவ்வாறு அவர் பேசினார்.