தேசிய முதியோர் தடகள போட்டி: காட்பாடியை சேர்ந்தவர்கள் தங்கம் வென்று சாதனை
தேசிய அளவிலான முதியோர் தடகள போட்டியில் காட்பாடியை சேர்ந்தவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
வேலூர்:
42-வது தேசிய மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 35 வயதுக்கு மேற்பட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இதில், வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூரை சேர்ந்த ஜி.துரைவேலு என்பவர் 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதேபோன்று 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் காட்பாடி தீயணைப்பு நிலைய டிரைவராக பணிபுரிந்து வரும் எம்.வேலு என்பவர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற துரைவேலு, வேலு ஆகியோர் விரைவில் பின்லாந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளனர்.