கொளுத்தும் வெயிலால் சுற்றுலா பயணிகள் அவதி

புதுவையில் கொளுத்தும் வெயிலால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

Update: 2022-05-01 16:03 GMT
புதுவையில் கொளுத்தும் வெயிலால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
கடும் வெயில்
கோடைக்காலம் தொடங்கிய நிலையில் புதுவையில் படிப்படியாக வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் 100 டிகிரியை தாண்டிய நிலையில் புதுவையிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
விடுமுறை நாளான நேற்று கடுமையான வெயில் கொளுத்தியது. காலை 10 மணிக்கே வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் குடை பிடித்தும், பெண்கள் துப்பட்டா கொண்டு முகத்தை மூடியபடியும், ஆண்கள் தொப்பி அணிந்தும் வெளியில் சென்றனர்.
முடங்கிய சுற்றுலா பயணிகள்
மதிய வேளையில் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. இதனால் சாலைகள், புதுவை கடற்கரை போன்றவை ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கடைகள் கூட்டமின்றி காணப்பட்டன. வெயிலுக்கு இதமாக இருக்கும் ஐஸ்கிரீம், மோர், இளநீர், நுங்கு, சர்பத், பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. 
வார இறுதி விடுமுறை நாளான நேற்று புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தியதால் அவதியடைந்து ஓட்டல் அறைகளுக்குள்ளேயே முடங்கியிருந்தனர்.
அக்னி நட்சத்திரம்
மாலையில் காற்று வாங்க கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நேற்று 97 டிகிரி வெயில் அளவு பதிவானது. இந்த நிலையில் நாளை மறுதினம் அக்னிநட்சத்திரம் தொடங்க உள்ளது. தற்போதே வெயில் கொளுத்தி வரும் நிலையில் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் கொடுமையை எப்படி சமாளிப்பது? என்ற வேதனையில் மக்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்