உழைப்பாளர்களின் வாழ்வில் ஒளியேற்றட்டும்
உழைப்பாளர்களின் வாழ்வில் ஒளியேற்றட்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.;
உழைப்பாளர்களின் வாழ்வில் ஒளியேற்றட்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரங்கசாமி
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுத்துள்ள மே தினவாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுவை மக்களுக்கும் குறிப்பாக உழைக்கும் பாட்டாளி தோழர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்கிற உரிமை முழக்கத்தை உலக வரைபடத்தின் எல்லைகோடுகளை தாண்டி ஒலிக்க செய்து, முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை ரத்தம் சிந்தி போராடி நிலைநாட்டிக்கொண்ட நாள்தான் மே தினம்.
மே தினம் என்பது உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் ஆற்றலை, அந்த வர்க்கத்தின் தேவையை உணர்ந்து அவர்களது உழைப்பின் மேன்மையை பறைசாற்றும் நாளாக அமைந்துள்ளது. மனித குலத்தின் மேன்மைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், வலிமைக்காகவும், அயராது பாடுபடும் பாட்டாளி வர்க்க தோழர்கள் தங்கள் வாழ்வில் மேன்மை பெற்று எல்லா நலமும் வளமும் பெற்று, வாழ்வாங்கு வாழ எல்லாம்வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று கூறி அனைவருக்கும் எனது மே தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
லட்சுமிநாராயணன்
அமைச்சர் லட்சுமிநாராயணன்:- உழைக்கும் மக்களின் உரிமையை நிலை நாட்டிய ஓர் உன்னத நாள் மே தினம். இந்திய திருநாட்டில் நமது மே தின கொண்டாட்டம் சிறப்பாக அனைவராலும் கொண்டாடப்பட்டாலும், அதனை உணர்வுபூர்வமாக கொண்டாடும் தொழிலாளர் பெருமக்களுக்கும், உரிமைக்காக போராடும் தலைவர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்து பாராட்ட வேண்டும்.
உழைக்கும் மக்களின் வாழ்வில் அனைத்தும் கிடைத்து வாழ்வில் ஒளியேற்ற நமது முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசின் திட்டங்கள் மூலம் கொடுத்து வரும் நன்மைகளை போற்றுவோம். அரசு ஊழியர்கள், சார்பு நிறுவன ஊழியர்களுக்கு கருணை உள்ளத்தோடு 7-வது சம்பள கமிஷன் நிலுவைகள், அனைத்து துறைகளிலும் தரப்படாமல் இருந்த பதவி உயர்வுகள், புதிய வேலைவாய்ப்புகள் என புதிய வளர்ச்சியை இந்த மே தினத்தில் நாம் காண்கிறோம். இந்த சேவை தொடரும்.
தேனீ.ஜெயக்குமார்
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்:-
தொழிலாளர் தின நிகழ்வையொட்டி என்னுடைய மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உடலை எந்திரமாக்கி உழைப்பை உரமாக்கி உலகத்தை இயங்க வைக்கும் உன்னத தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் என் உளமார்ந்த மே தின நல்வாழ்த்துக்கள்.
சிவா எம்.எல்.ஏ.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. அமைப்பாளருமான சிவா:-
புதுச்சேரி உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உழைப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய தொகை அனைத்தும் விரைவாக கிடைக்க வேண்டும். மூடப்பட்டுள்ள அரசு நிறுவனங்கள் அனைத்தும் திறந்து உழைக்க தயாராக இருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கவேண்டும்.
புதுச்சேரியில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்பபு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும்.
அ.தி.மு.க.
அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்:-
புதுவை மாநில மக்களுக்கும் குறிப்பாக தொழிலாளர் தோழர்களுக்கும், அ.தி.மு.க. சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வு உயர்வு பெறவும், போராடிப்பெற்ற தொழிலாளர்களின் உரிமையை பேணிக்காப்பதும் அரசின் கடமையாகும்.
மே தினம் கொண்டாடும் நமது அரசு உழைக்கும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அனைத்து தனியார் நிறுவனங்களும் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என இந்த மே தின நாளில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
ஓம்சக்தி சேகர்
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர்:-
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் என்ற எம்.ஜி.ஆரின் வரிகளுக்கு இணங்க ஜெயலலிதாவின் ஆசியோடு உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உழவு, நெசவு, பஞ்சாலை பல்வேறு தொழிற்சாலை என பல வகை அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்க்ள, விளம்புநிலை தொழிலாளர்கள் என பலவகைப்பட்ட உழைக்கும் பெருமக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று சிறப்புற வாழ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி, அ.தி.மு.க. இணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் உள்பட பலர் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.