இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மர்மநபர்கள் - போலீசார் விசாரணை...!

குளச்சல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.;

Update: 2022-04-29 05:15 GMT
குளச்சல்,

குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் ஜாண். கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளா(35). தற்போது இவர்கள் காமராஜர் சாலையில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் பரிமளா ஸ்கூட்டரில் வீட்டிலிருந்து புறப்பட்டு  கடைக்கு சென்றார்.

வீட்டிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் சாலையில் உள்ள வேகத்தடையில் பரிமளா ஸ்கூட்டரின் வேகத்தை குறைத்தார். அப்போது எதிரே பைக்கில் வந்த 2 இளைஞர்களில் பின்னால் இருந்த இளைஞர் திடீரென பரிமளாவின் கழுத்தில் கிடந்த 7.5 பவுன் செயினை பறிக்க முயன்றார்.

அதிர்ஷ்டவசமாக செயின் அறுந்து அவரது சுடிதாருக்குள் விழுந்தது. இதில் நிலை தடுமாறிய பரிமளா ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்தார். அவர் எழுந்து ஸ்கூட்டரை எடுப்பதற்குள் மீண்டும் அந்த வாலிபர் பரிமளாவை நோக்கி ஓடி வந்தார். 

சுதாரித்துக் கொண்ட பரிமளா கல்லை எடுத்து அந்த வாலிபர் மீது வீசினார். அதற்குள் சப்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது அங்கு சவாரி சென்ற ஆட்டோ டிரைவர் அந்த வாலிபரை பிடிக்க துரத்தி ஓடினார். ஆனால் மின்னல் வேகத்தில் வாலிபர்கள் பைக்கில் ஏறி  தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த குளச்சல் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 


மேலும் செய்திகள்