ஆட்டோ டிரைவர் படுகொலை 4 பேர் கைது

மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம் கிராமத்தில் ஆட்டோ டிரைவரை படுகொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2022-04-28 21:10 GMT
திருவொற்றியூர்,

மீஞ்சூர் அருகே வெள்ளிவாயல் சாவடி ராமானுஜர் தெருவில் வசித்து வந்தவர் ரவிச்சந்திரன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி கீர்த்தனா (24) என்ற மனைவியும், 1½ வயது குழந்தையும் உள்ளனர். ரவிச்சந்திரன், கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் அவருடைய மனைவி, ஏன் ஆட்டோ ஓட்ட செல்லவில்லை? என்று கேட்டார்.

அதற்கு அவர், எனக்கும் நாப்பாளையம் பகுதியை சேர்ந்த மதன் என்பவருக்கும் தகராறு இருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் மதன் (27), பப்லு (27), ஜெயபிரகாஷ் (24), பரத் (26) ஆகிய 4 பேரும் ரவிச்சந்திரனை வீட்டுக்கு வந்து மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றனர்.

படுகொலை

அதன்பிறகு நீண்ட நேரமாகியும் கணவன் வீட்டுக்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த கீர்த்தனா, தனது உறவினர்கள் 3 பேருடன் சேர்ந்து நாப்பாளையம் கிராமம், வெற்றி நகர் பகுதியில் உள்ள எம்.ஆர்.எப். மைதானத்திற்கு சென்று தேடினார். அங்கு ரவிச்சந்திரன் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அங்கே மதன் மற்றும் அவரது கூட்டாளிகள் மதுபான பாட்டில் மற்றும் கத்தியுடன் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் கீர்த்தனா மற்றும் உறவினர்களை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுபற்றி மணலி புதுநகர் போலீஸ் நிலையத்தில் கீர்த்தனா புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று ரவிச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

4 பேர் கைது

இதுகுறித்து அம்பத்தூர் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் மணலிபுதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் சங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இடையஞ்சாவடி அரசு பள்ளி அருகே மைதானத்தில் பதுங்கியிருந்த மதன், பப்லு, ஜெயபிரகாஷ், பரத் ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த கத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேரையும் பொன்னேரி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்