சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அடுத்தடுத்து ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நோயாளிகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.;

Update: 2022-04-27 23:18 GMT
சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி இந்தியாவிலேயே பழமையான ஆஸ்பத்திரிகளில் ஒன்றாகும். இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் நடக்கும் அறுவை சிகிச்சைகள் மற்றும் இதர சிகிச்சைகளுக்கான கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், முககவசம், கையுறை, பஞ்சு மற்றும் தேவையான உபகரணங்கள் அனைத்துமே ‘டவர்-1’ கட்டிடத்துக்கு பின்புறம் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த கிடங்குக்கு அருகேயே கல்லீரல் தொடர்பான சிகிச்சை பிரிவு, நரம்பியல் பிரிவு, எலும்பியல் பிரிவு, துணை மருத்துவ பிரிவுகளும் உள்ளன. இந்த பிரிவுகளில் கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் உறவினர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இதே கட்டிடத்தில் தங்கியுள்ளனர். 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் இந்த கட்டிடத்தில் ஏராளமான மருத்துவ ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

‘திடீர்’ தீ விபத்து

இந்த நிலையில் மருந்து கிடங்கு பிரிவில் இருந்து நேற்று காலை 10.30 மணி அளவில் கரும்புகை வெளியேற தொடங்கியது. நேரம் செல்ல செல்ல புகையின் அளவு அதிகமானதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அடுத்தடுத்த நிமிடங்களில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் ‘தீ... தீ...’ என்று சத்தம் போட்டனர்.

அடுத்தடுத்த நிமிடங்களில் தீப்பற்றி எரிந்த கிடங்கின் மேல் தளத்தில் இருந்த நரம்பியல் பிரிவில் இருந்த நோயாளிகள் அலற தொடங்கினர். இதையடுத்து உடனடி மீட்பு நடவடிக்கைகளில் அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட தொடங்கினர். நரம்பியல் பிரிவில் இருந்து அருகே உள்ள துணை பிரிவுக்கு நோயாளிகளை மாற்ற முடிவு செய்தனர்.

அதேவேளை தகவலின்பேரில் எழும்பூர், வண்ணாரப்பேட்டை, தியாகராயநகர், அசோக்நகர், திருவல்லிக்கேணி நிலையங்களில் இருந்து தீயணைப்பு துறை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்தன

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவர தொடங்கினர். அதேவேளை கரும்புகை அளவுக்கு அதிகமாக வெளியேற தொடங்கியதால் ஜன்னல்களை உடைத்து, தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டனர். மருந்து கிடங்கின் ஜன்னலை உடைத்து தீயணைப்பு வீரர்கள் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, திடீரென ‘டமார்’ என பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் சுற்றியிருந்த அனைவரும் பதறியடித்து ஓடினர்.

பின்னர்தான் வெடித்தது ஆக்சிஜன் சிலிண்டர் என்பதும், கிடங்கில் 15-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும் பகுதியில் தண்ணீரை பீய்ச்சியடித்தபடி முன்னேறினர். இதற்கிடையில் மேலும் 2 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஒரு பக்கம் தீயணைப்பு, இன்னொரு பக்கம் சிலிண்டர் மீட்பு என வீரர்கள் கடுமையாக போராடினர். கிடங்கில் இருந்த சிலிண்டர்களையும் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்தனர். அப்போது தான் பாதி நிம்மதியே ஏற்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

சவாலான பணியில் வீரர்கள்

தீயணைப்பு துறை இயக்குனர் கிஷோர் ரவி, இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கள நடவடிக்கைகளில் குதித்தனர். குறிப்பாக அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் கிடங்கின் மெயின் வாசலுக்கே சென்று தீயை அணைக்கும் பணியை பார்வையிட்டு, நொடிக்கு நொடி வீரர்களுக்கு உத்தரவுகளையும், தேவையான அணுகுமுறைகளையும் அறிவுறுத்தியபடியே இருந்தார்.

முன்னதாக தீயணைப்பு வீரர்கள் கள நடவடிக்கைகளை தொடங்கும் முன்னரே அந்த கட்டிடம் முழுமைக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கட்டிடத்தில் இருந்த நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் ‘ஸ்கை லிப்ட்’ எந்திரம் மூலமும் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தீயணைப்பு வீரர்கள் முழுமூச்சில் ஈடுபட்டனர்.

பிற்பகல் 1.15 மணிக்கு நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, கிடங்கின் உள்ளே தீயணைப்பு வீரர்கள் சென்று தீயணைப்பு பணிகளில் வேகம் காட்டினர். எரிவது மருந்து பொருட்கள் என்பதால் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக அமைந்தது.

மருத்துவ உபகரணங்கள் நாசம்

இந்த விபத்தில் மருத்துவ கிடங்கில் இருந்த ஏராளமான மருத்துவ உபகரணங்களும், கருவிகளும் நாசமாகின. இதனால் மருத்துவ உபகரணங்கள் கையாளுகையில் சிக்கல் எழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் கூறுகையில், ‘‘மருத்துவ உபகரணங்கள் அனைத்துமே தீயில் கருகி நாசமடைந்து விட்டன. அவசர இருப்பில் (எமர்ஜென்சி பீரோ) உள்ள இதர உபகரணங்களை உடனடியாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும்’’ என்றனர்.

காற்றிலும் மருந்தின் நெடி காட்டமாகவே இருந்தது. இதனால் ரிப்பன் கட்டிடம் தாண்டியும் காற்றில் மருந்து பொருட்களின் நெடி இருப்பதை உணர முடிந்தது.

அமைச்சர்கள் ஆய்வு

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி தீ விபத்து பற்றி கேள்விபட்டதும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தயாநிதி மாறன் எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் உடனடியாக வந்து பார்வையிட்டனர். எந்த நோயாளிகளுக்கும் இதில் பாதிப்பில்லை என்ற தகவல் அறிந்து நிம்மதி பெருமூச்சு கொண்டனர்.

மாலை 5.30 மணிக்கு கரும்புகை வெளியேறுவது நின்று, தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சவாலான இந்த மீட்பு பணியில் சென்னை நகரை சுற்றியுள்ள நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களும், மாநகராட்சி சார்பில் 5 வாகனங்களும் முழுமூச்சாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து நெரிசல்

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பல அரசு கட்டிடங்கள் உள்ளதால் காலை நேரத்தில் சென்னையில் மிகவும் பரபரப்பாக இயங்கும் சாலையாக இருந்து வருகிறது.

இந்த சாலையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து நடந்ததால் தீயணைப்பு வாகனங்கள் செல்ல வழியை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தினர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காரணம் என்ன?

இந்த எதிர்பாராத தீ விபத்துக்கு கிடங்கில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடைக்கலம் தந்த முனீஸ்வரர் கோவில்
ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி மருந்து கிடங்கில் தீ விபத்து நடந்தபோது, அந்த கட்டிடத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பத்திரமாக அங்கிருந்து மீட்கப்பட்டனர். உடனடி ஏற்பாடு இல்லாத நிலையில் கட்டிடத்தின் பின்புறம் உள்ள முனீஸ்வரர் கோவில் வளாகத்தில் நோயாளிகள்-உறவினர்கள் தஞ்சம் அடைந்தனர். உடைமைகளுடன் அங்கேயே நீண்ட நேரம் காத்திருந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரையும் ஆஸ்பத்திரியில் உள்ள 3-ம் டவர் கட்டிடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கேயே சிகிச்சை தொடர ஏற்பாடு செய்யப்பட்டது.

புதிதாக கட்டப்பட்ட இந்த 3-ம் டவர் கட்டிடம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏணி வழியாக இறங்கி உயிர் தப்பிய நோயாளிகள்-உறவினர்கள்
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்தின்போது நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தீயணைப்பு வாகனத்தில் இருந்த இரும்பு ஏணிகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அந்தவகையில் நரம்பியல், எலும்பியல், இதயவியல் உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சை பெற்ற 99 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது மருத்துவ உபகரணங்கள் வெடித்து சிதறியதில் தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் கடமையே கண்ணாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆஸ்பத்திரியில் தீயை அணைக்க 8 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மாநகராட்சியின் 5 தண்ணீர் லாரிகளை உடனடியாக வரவழைத்து உதவினார்.

மேலும் செய்திகள்