உயர்மட்ட சாலை அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல் சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

செங்கல்பட்டு-தாம்பரம் மற்றும் பூந்தமல்லி-ஸ்ரீபெரும்புதூர் இடையே உயர்மட்ட சாலை அமைப்பதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாக சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.;

Update: 2022-04-27 22:25 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தில் கும்பகோணம் எம்.எல்.ஏ. அன்பழகன், குளித்தலை மாணிக்கம், நெய்வேலி சபா.ராஜேந்திரன், தளி ராமச்சந்திரன், திருச்செங்கோடு ஈஸ்வரன் ஆகியோர் கேள்விகள் கேட்டனர். அவர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில் வருமாறு:-

செங்கல்பட்டு வரை 6 வழிச்சாலை அமைத்தாலும் போக்குவரத்து நெரிசல் தீராது என்று உறுப்பினர் ஈஸ்வரன் கூறியுள்ளார். செங்கல்பட்டில் இருந்து வண்டலூர் வரைக்கும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மதுரவாயல் வரைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டம் உள்ளதா என்றும் அவர் கேட்டார்.

கருத்துரு உள்ளது

அந்த பகுதியில் அதிக போக்குவரத்து உள்ளது. செங்கல்பட்டு வரைக்கும் விரைவாக வந்துவிடலாம். ஆனால் அங்கிருந்து சென்னை வருவதற்கு 2 மணி நேரம் ஆகிவிடுகிறது. தற்போது அங்கு சாலையை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு மேல்மட்ட சாலை அமைப்பதற்கு திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு-தாம்பரம் இடையே மேல்மட்ட சாலை அமைப்பதற்கான கருத்துரு உள்ளது.

அதுபோல ஸ்ரீபெரும்புதூர்-பூந்தமல்லி இடையேயும் அதே நிலைதான். கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதும் அரசுக்கு தெரியும். பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை மேல்மட்ட சாலை அமைக்க கருத்துரு தயார் செய்யப்பட்டது. அது பற்றியும் மத்திய அரசிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலும் வலியுறுத்தி, அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்