சாலைப் பணிகளில் முறைகேடு: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கரூர் மாவட்டத்தில் சாலைப் பணிகளில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-04-27 17:48 GMT
சென்னை,

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், 2020 -21ல் கரூர் மாவட்டத்தில் 6 சாலைகள் அமைக்க, 130 கோடி ரூபாய் அளவுக்கு சங்கரானந்த் இன்ஃப்ரா என்ற தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது. டெண்டர் பெற்ற நிறுவனம் சாலையை அமைக்காத நிலையில் அந்நிறுவனத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 3 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்று முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், புகாரின் அடிப்படையில், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு நெருக்கமான சங்கரானந்த் இன்ஃப்ரா நிறுவனத்துக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது. எனவே, அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், புகார் அளித்த பின் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம், குறிப்பிட்ட அந்த சாலைகளை அமைத்துள்ளன. கண்துடைப்புக்காக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் மூலம் முறைகேடு நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளதால், இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அப்போது, தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சுட்டிக்காட்டினர். இதையடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதி கோரியதுடன், ஆதாரங்களுடன் புகார் அளிக்கவும் முன்னாள் அமைச்சர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

இதை ஏற்று வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்த நீதிபதிகள், புதிய புகாரை அளிக்க சட்டத்தின் அனுமதி உள்ளதாகவும், நீதிமன்ற அனுமதி தேவையில்லை எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்