பெற்றோர் திடீர் போராட்டம்
அரசு பள்ளி தாமதமாக திறக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பெற்றோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பள்ளி தாமதமாக திறக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பெற்றோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பெண்கள் பள்ளி
பாகூர் தாலுகா அலுவலகம் எதிரே அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளை பொருத்தவரை வழக்கமாக காலை 8.30 மணி அளவில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் பாகூர் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி தினமும் 9 மணிக்கு மேல் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை பாகூர் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி 9 மணி வரை திறக்கப்படவில்லை. இதனால் 8.30 மணிக்கே பள்ளிக்கு வந்த மாணவிகள் மற்றும் அவர்களை அழைத்து வந்த பெற்றோர் பள்ளியின் முன்பு நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெற்றோர் போராட்டம்
பள்ளிக்கூடம் திறப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டதால் பொறுமை இழந்த பெற்றோர் பள்ளிக்கூடம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த பாகூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆசிரியர் வந்தவுடன் பள்ளிக்கூட நுழைவாயில் திறக்கப்பட்டு மாணவர்கள் உள்ளே சென்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாள்தோறும் பள்ளிக்கூடம் தாமதமாகவே திறக்கப்படுகிறது. ஆசிரியர், ஊழியர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. ஆசிரியர்களும் உரிய நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை. இது சம்பந்தமாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.