பட்டப்பகலில் ரவுடிக்கு கத்திவெட்டு
கிருமாம்பாக்கம் அருகே பட்டப்பகலில் ரவுடிக்கு கத்திவெட்டு விழுந்தது. போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் அவர் உயிர் தப்பினார்.;
கிருமாம்பாக்கம் அருகே பட்டப்பகலில் ரவுடிக்கு கத்திவெட்டு விழுந்தது. போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் அவர் உயிர் தப்பினார்.
பிரபல ரவுடி
புதுவை கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமுதன் (வயது 34). இவர் மீது பிள்ளையார்குப்பம் முன்னாள் கவுன்சிலர் வீரப்பன், இவரது மைத்துனர் சாம்பசிவம் ஆகியோரை கொலை செய்த வழக்கு, ஏனாம் சிறைக்குள் அத்துமீறி நுழைந்து ரவுடியை கொல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள இவர், ஒரு வழக்கு தொடர்பாக கடலூர் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு தனது நண்பர் அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிருமாம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கத்திவெட்டு
மோட்டார் சைக்கிளை சுபாஷ் ஓட்டினார். பின்னால் அமுதன் அமர்ந்து இருந்தார். புதுச்சேரி-கடலூர் சாலையில் காட்டுக்குப்பம் துணை மின் நிலையம் அருகே வந்தபோது, பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் திடீரென அமுதனை கத்தியால் வெட்டினர்.
இதில் அமுதன் தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் பீறிட்டது. இருப்பினும் விடாமல் அந்த கும்பல் மீண்டும் வெட்ட முயன்றது. அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் 3 பேரும் கீழே விழுந்தனர்.
போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
இதனால் சுதாரித்துக்கொண்ட அமுதன், சுபாஷ் இருவரும் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்று கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு ரத்தம் சொட்ட சொட்ட போலீசாரிடம் நடந்த சம்பவத்தை அமுதன் கூறினார்.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார், அமுதனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அமுதன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் ரவுடியை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.