பொன்னமராவதி அருகே வீடு கட்ட வாணம் தோண்டும் போது 7½ பவுன் தங்க நாணயங்கள் கண்டெடுப்பு
பொன்னமராவதி அருகே ஏனாதியில் வீடு கட்ட வாணம் தோண்டும்போது 7½ பவுன் பழங்கால தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை வருவாய்த்துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
பொன்னமராவதி:
தங்க நாணயங்கள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே ஏனாதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி ஜெயலட்சுமி. கூலி தொழிலாளர்கள். இவர்கள் புதிய வீடு கட்ட வாணம் தோண்டியுள்ளனர். அப்போது பழங்கால பானை ஒன்று கிடைத்தது. அதில் தங்க நாணயங்கள் இருந்தன. அதனை பார்த்து ஆச்சரியமடைந்து உடனடியாக பொன்னமராவதி போலீசாருக்கும், வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, வருவாய்த்துறையினர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் உடைந்த பானையை ஆய்வு செய்த போது அதில், 16 தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்தது.
கருவூலத்தில் ஒப்படைப்பு
இதையடுத்து இதனை அதிகாரிகள் மீட்டு பொன்னமராவதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு சென்று அவைகள் தங்க நாணயம் தானா என்று உறுதி செய்து அளவீடு செய்யப்பட்டது.
அப்போது அவை தங்க நாணயங்கள் என்றும், 7½ பவுன் எடை இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் ஜெயலட்சுமி-நாகராஜன், தாசில்தார், போலீசார் ஆகியோர் பொன்னமராவதியில் உள்ள கருவூலத்திற்கு சென்று அங்கு தங்க நாணயங்களை ஒப்படைத்தனர்.
மேலும் தனக்கு சொந்தமான இடமாக இருந்தாலும் அரசாங்கத்திற்கு உரிய பொருள் என கருதி உடனடியாக தகுந்த அதிகாரிகளை வரவழைத்து தங்க நாணயங்களை ஒப்படைத்த ஜெயலட்சுமி மற்றும் நாகராஜனை பாராட்டி தாசில்தார் சால்வை அணிவித்தார்.