லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் புதுவை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-04-25 14:34 GMT
புதுச்சேரி
லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று  புதுவை  போக்குவரத்து  போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உரிய ஆவணங்களின்றி...

புதுவை நகரப்பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இந்த விபத்துக்குள்ளாகும் வாகனத்தை ஓட்டி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டி வருவது வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக 18 வயது நிரம்பாத சிறுவர்கள் 2 சக்கர வாகனங்களை அதிக அளவில் ஓட்டி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகையவர்கள் விபத்தில் சிக்குவதால் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
இவற்றை தடுக்க போக்குவரத்து போலீசார் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் சிக்குபவர்களுக்கு அபராதங்களையும் விதித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் கூறியதாவது:-

ரூ.25 ஆயிரம் அபராதம்

2 சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் ஓட்டி வருபவர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்கவேண்டும். அனைத்து சிக்னல்களிலும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
குறிப்பாக புதிய சட்டப்படி லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரமும், 18 வயதுக்கு குறைந்தவர்களாக இருந்தால் ரூ.25 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படும்.
இன்சூரன்ஸ் இல்லாதவர்கள், 2 சக்கர வாகனத்தில் 3 பேர் செல்லுதல், ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் செல்லுதல், ஹெல்மெட் அணியாமல் செல்லுவது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது ஆகியவற்றுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்