திருச்சி: துக்க நிகழ்ச்சியில் சாப்பாட்டு பிரச்சினை- ஒருவர் அடித்துக் கொலை...!
திருச்சி அருகே துக்க நிகழ்ச்சியில் ஏற்பட்ட சாப்பாட்டு பிரச்சினையில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.;
திருச்சி,
திருச்சி மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது50) இவர் கடந்த பல ஆண்டுகளாக வீட்டிற்குச் செல்லாமல் திருச்சி குட்செட் பகுதியில் லாரிகளில் லோடு ஏற்றும் வேலையை செய்து விட்டு அங்கேயே தங்கி இருந்துள்ளார்.
இதேபோல் விஜயன் (55) என்பவரும் நீண்ட வருடங்களாக குட்செட் பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து அங்கேயே சாப்பிட்டுவிட்டு வாழ்ந்து வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று குட்செட் பகுதியில் பணிபுரியும் ஒருவர் இறந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குட்செட் பகுதியில் தங்கியிருக்கும் அனைவரும் துக்கம் விசாரிப்பதற்காக இறந்தவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு சாப்பிடுவதற்காக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து செல்வம் தான் தங்கியிருக்கும் இடத்தில் தன்னுடைய உணவு பொட்டலத்தை வைத்துள்ளார். அதை வேறு ஒரு நபர் எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் சாப்பிடுவதற்காக செல்வம் தான் வைத்திருந்த உணவு பொட்டலத்தை தேடியுள்ளார். அப்போது அந்த இடத்தில் அது இல்லை. பின்னர் அதை விஜயனிடம் கேட்டுள்ளார். அப்போது அதை வேறொருவர் சாப்பிட்டு விட்டார் என்று கூறி உள்ளார்.
இந்த பிரச்சனை காரணமாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் விஜயன் அருகிலிருந்த கட்டையை எடுத்து செல்வத்தின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் செல்வம் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் செல்வத்தை கட்டையால் அடித்துக் கொன்று விட்டு விஜயன் தப்பி ஓடியது தெரிய வந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பாலக்கரை போலீசார் தப்பி ஓடிய விஜயனை வலைவீசி தேடி வருகின்றனர்.