இரவில் 6 மணி நேரம் மின்வெட்டு: தீப்பந்தம் ஏந்தி கிராம மக்கள் போராட்டம்

இரவில் 6 மணி நேரம் மின்வெட்டால் தூக்கத்தை தொலைத்த கிராம மக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-04-22 20:12 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதியில் உள்ள ஆலத்தூர், சித்தூர், தொழுதூர், கீழ்கல்பூண்டி, வடகராம்பூண்டி, மேல்கல்பூண்டி, கீழ்கல்பூண்டி, கண்டமத்தான், வயித்தியநாதபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக பகலிலும், இரவிலும் மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 12 மணி நேரமாகும். இதில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்வெட்டு ஏற்பட்டது.

விவசாயிகள் கண்ணீர்

அதாவது ஒரு மணி நேரம் மின்வினியோகம், ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இரவில் மட்டும் 6 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி படிக்க முடியாமல் அவதி அடைந்தனர்.

இரவில் உறங்க முடியாமல் கிராம மக்கள் தவித்தனர். மின்வெட்டால் மின்மோட்டாரை இயக்கி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்களும் காய்ந்து வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் மின்வெட்டு ஏற்பட்டதால் ஆலத்தூர் கிராம மக்கள் ஒன்று திரண்டு தீப்பந்தம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடா்ந்து கிராம மக்கள் தங்களது வீட்டின் முன்பும், மின்கம்பத்திலும் தீப்பந்தத்தை ஏற்றினர். மேலும் மின்வெட்டை கண்டித்தும், அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், மின்தடையால் தூக்கத்தை தொலைத்து வீதியில் வந்து நிற்கிறோம். மின்தடை தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு அவர்கள், இங்கு மட்டும் மின்வெட்டு இல்லை. தமிழ்நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் உத்தரவுபடி மின்சாரத்தை நிறுத்துவதாக கூறுகிறார்கள். இதனால் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்