கல்லூரி மாணவரை குத்திக்கொன்ற தந்தை கைது

குடும்ப தகராறில் கல்லூரி மாணவரை குத்திக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-22 16:53 GMT
குடும்ப தகராறில் கல்லூரி மாணவரை குத்திக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர்

அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் சிவாஜி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்த நிலையில், வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த வீரலட்சுமியை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது மகன் தினேஷ் (21). புதுச்சேரி அரசு மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். குடும்ப பிரச்சினை தொடர்பாக கிருஷ்ணமூர்த்திக்கும், வீரலட்சுமிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

குத்திக்கொலை

நேற்று  இரவும் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் தனது தந்தை கிருஷ்ணமூர்த்தியை தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி, வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து மகன் என்று கூட பாராமல் தினேசின் கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடி விட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தினேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தினேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தந்தை கைது

இதுகுறித்து தகவல் அறிந்த தினேசின் நண்பர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று  இரவு அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். 
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கிருஷ்ணமூர்த்தியை தேடி வந்தார். இந்தநிலையில் இன்று   காலை வீராம்பட்டினம் சாராய கடையில் பதுங்கியிருந்த கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்