சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம் - பக்தர்கள் சாமி தரிசனம்...!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-04-22 16:00 GMT
சமயபுரம், 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

அன்று முதல் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளினார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று  அம்மன் முத்துப் பல்லக்கில் எழுந்தருளினார்.

இந்த நிலையில் இன்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று காலை அம்மன் உற்சவர் மண்டபத்திலிருந்து கேடயத்தில் எழுந்தருளி தெப்ப மண்டபத்திற்கு வந்தடைந்தார். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரவு 7.55 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். 

தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகள் ஒலிக்க அம்மன் தெப்பக் குளத்தில் உள்ள மைய மண்டபத்தைத் மூன்று முறை வலம் வந்து தெப்பத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளினார்.

இந்த தெப்ப உற்சவத்தை காண்பதற்காக தெப்பத்தின் நான்கு புறங்களிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். தொடர்ந்து 8.45 மணிக்கு அம்மன் தெப்பத்திலிருந்து இறக்கப்பட்டு கேடயத்தில் வீதி உலா வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார். 

பாதுகாப்பு பணியில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ்,வாசுதேவன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்